Sunday, July 17, 2016

பள்ளிக்கல்வி – தமிழகம் சிக்கிக்கொண்டிருக்கும் அபாயப்பொறி.



தஞ்சை பெஸ்ட் பள்ளியில் +2 படிக்க ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கட்டணம் வாங்குவதாகவும் ஆனால் 25 ஆயிரத்துக்கு மட்டுமே ரசீது  தரப்படுவதாகவும், மேலும் நாமக்கல் கோச்சிங் என்று சொல்லிவிட்டு சாதாரண கோச்சிங் தரப்படுவதாகவும் கூறி பெற்றோர்கள் சில நாட்களுக்கு முன்னால் போராடினார்கள். அதே காலகட்டத்தில் தஞ்சையை சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் மகளை ஒரு பிரபலமான பள்ளியில் இருந்து பெஸ்ட் பள்ளிக்கு மாற்றலாமா என தீவிரமான பரிசீலித்துக்கொண்டிருந்தார்கள். காரணம் இந்த ஆண்டு பெஸ்ட் பள்ளியின் முதல் மாணவர் இவர்களது மகள் படிக்கும் பள்ளி முதல் மாணவரைவிட 2 மதிப்பெண் கூடுதலாக பெற்றிருக்கிறார். 

இன்னொரு நிகழ்வு, எனது நெருங்கிய உறவினர் தமது மகனை ஆண்டுக்கு ஒரு லட்சம் செலவாகும் பள்ளியில் எல்.கே.ஜி சேர்த்திருக்கிறார். அவரது இன்னொரு மகனையும் அங்கேயே சேர்க்க உத்தேசித்திருக்கிறார். அவர்கள் +2 படிக்கும் வரை ஆகப்போகும் தோராயமான செலவு எவ்வளவு குறைவாக கணக்கிட்டாலும் 30 லட்சம் ஆகும். 2 லட்சம் என்பது அவரது ஆண்டு வருவாயில் பாதிக்கும் அதிகம். ஆனாலும் அவர் துணிந்து இந்த பள்ளியை தெரிவு செய்திருக்கிறார்.

சக்திக்கு மீறி செலவிட்டு படிக்க வைப்போரது சிக்கல் கல்விச்செலவோடு நிற்பதில்லை. சென்னையின் உயர்குடி மக்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் மிகச்சிரமப்பட்டு இடம் வாங்கிய நண்பர் ஒருவர் பிரச்சினை வேறொன்றாக இருக்கிறது. அவரது மகள் பள்ளி சுற்றுலாவுக்காக வாங்கிய ஆடை அணிகலன்களின் விலை மட்டும் பதினைந்தாயிரம் ரூபாய் (சுற்றுலா செலவு ஏழாயிரம்தான்). மகளது மாலை சிற்றுண்டி செலவே மலைக்க வைப்பதாக இருப்பதாக சொல்லி புலம்புகிறார் அவர் (தெரிவு செய்யும் கடைகள் அப்படி). அவர் வசம் இப்போது சேமிப்பு என்று ஏதுமில்லை, கல்லூரி செலவுகள் பற்றிய யோசனையே அவரை அச்சமூட்டுகிறது.

இந்த கட்டுரைக்காக தெரிந்தவர்கள் வட்டாரத்தில் இருக்கும் 21 பெற்றோரிடம் சில கேள்விகளை கேட்டேன். (எல்லோரும் 2 – 3 வயதுடைய குழந்தைகளின் பெற்றோர்கள், எல்லோரும் நடுத்தர வர்கத்தவர்கள் சிலருக்கு சொந்த வீடுகூட இல்லை)

உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க எவ்வளவு செலவளிப்பீர்கள்?
அனேகம் பேர் எழுபதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை என்றார்கள். சிலருக்கு அது குறித்த எந்த யோசனையும் இல்லை. ஆனால் அவர்களது தெரிவு ஆண்டுக்கு எழுபத்தைந்தாயிரம் வாங்கும் பள்ளியாக இருக்கிறது.
இவ்வளவு செலவு பிடிக்கும் பள்ளியின் மூலம் உங்கள் குழந்தையிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? 

எல்லோரிடமும் இருந்த ஒரே பதில் அவன(ள)து சிறப்பான எதிர்காலம் என்பதாக இருந்தது. ஒரே ஒரு தாய் மட்டும் ஒழுக்கம்(டிசிப்ளின்) என்றார். நீங்கள் தெரிவு செய்த பள்ளி ஒழுக்கத்தை கற்றுத்தரும் என எதைவைத்து நம்புகிறீர்கள் என கேட்டேன்.. அப்பள்ளியில் படிக்கும் - அவரது தெரு குழந்தைகள் மடியில் துண்டு போர்த்திக்கொண்டு ஸ்பூனில் சாப்பிடும் அளவுக்கு பயிற்சி பெற்றிருப்பதாக சொன்னார்.

ஒருவேளை இந்த கல்விச் செலவுகளை உங்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?
ஒருவரைத் தவிர எல்லோரும் ஏதாச்சும் ஒன்னு பண்ணி சமாளிக்க வேண்டியதுதான் என்றார்கள். ஒரே ஒரு தந்தை மட்டுமே அன்றைய சூழலுக்கு தகுந்த பள்ளியில் சேர்ப்பேன் என்றார். மற்றவர்கள் அந்த சிந்தனைக்கே தயாராக இல்லை. 

நீங்கள் சேர்க்க விரும்பும் பள்ளியை எப்படி தெரிவு செய்தீர்கள்?
எல்லோரும் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமே பள்ளியை தெரிவு செய்திருக்கிறார்கள். எந்த பள்ளிக்கு டிமாண்ட் அதிகம் இருக்கிறதோ அதுவே விருப்பத் தெரிவில் முதலில் இருக்கிறது. பலரும் அவர்கள் விரும்பும் பள்ளியில் படிக்கும்/ படித்த குழந்தைகளையோ அல்லது அவர்களது பெற்றோரையோ சந்தித்து பேசியதில்லை. சுருங்கச்சொன்னால் எல்லோரும் ஓடும் திசையில் ஓட முனைகிறார்கள்.

(3வயது குழந்தைகளின் பெற்றோருக்கான கேள்வி) உங்கள் குழந்தை தன் உணவை தானே சாப்பிடுமா?
அனேகமாக எல்லோரது பதிலும் இல்லை என்பதே.

(3வயது குழந்தைகளின் பெற்றோருக்கான கேள்வி) உங்கள் குழந்தைக்கு A,B,C,D தெரியுமா?
எல்லோரது குழந்தைகளுக்கும் தெரிந்திருக்கிறது. எல்லோரும் தங்கள் குழந்தைகளை ப்ரீ கேஜியில் சேர்த்திருகிறார்கள். ஒருவர் பிரீ கேஜிக்கு ஒரு லட்சம் நன்கொடை கொடுத்திருக்கிறார் (அந்தப்பள்ளியில் எல்.கே.ஜி அட்மிஷன் கஷ்டமாம்).

இந்த பெற்றோருக்கு சில தகவல்களை கொடுக்கவும் கேட்கவும் வேண்டியிருக்கிறது,

1.   குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்துக்கு பள்ளியைவிட பெரிதும் அவசியமானது சரியான வீட்டுச்சூழல் (பெற்றோர்களுக்கிடையேயான இணக்கமான வாழ்க்கை) . கல்விக்கட்டணம் பெரும் நெருக்கடியை கொடுக்கும் நிலையில் ஒரு அமைதியான வீட்டுச்சூழல் சாத்தியமாகுமா?

2.      “  X ” எனும் எழுத்தை எழுதுவதற்கான மூளைத்திறனைப் பெற குழந்தைகளுக்கு 5 வயதாவது ஆகியிருக்க வேண்டும். பல வளர்ந்த நாடுகளில் எழுத்துப்பயிற்சி அதற்குப் பிறகுதான் ஆரம்பிக்கும். உங்கள் குழந்தைகளுக்கான எழுத்துப்பயிற்சியை எப்போது உங்கள் பள்ளி ஆரம்பித்தது?


3.   இன்றைய கல்வி முறையானது 60 விழுக்காடு குழந்தைகளுக்குத்தான் பொருத்தமானது, ஏனையவர்களுக்கு அது அத்தனை இலகுவானதல்ல. ஒருவேளை அந்த 40 விழுக்காடு மாணவர்களில் உங்கள் மகனோ மகளோ ஒருவராக இருந்தால் உங்கள் எதிர்வினை எப்படியிருக்கும்?

4.    சமீப காலங்களில் படித்துவிட்டு வெளியேறும் மாணவர்களில் 80 சதவிகிதமானவர்கள் பணியாற்ற தகுதியற்றவர்கள் என என தரவுகள் சொல்கின்றன. இவர்களில் பெரும்பான்மையோர் தனியார் பள்ளிகளில் பயின்றவர்கள். இந்த சிக்கலில் இருந்து உங்கள் குழந்தையை அவரது பள்ளி காப்பாற்றும் என நம்புகிறீர்களா… அல்லது இதனை சமாளிக்கும் வழி குறித்து ஏதேனும் யோசனை இருக்கிறதா?


5.   மேலே சொன்ன சிக்கலுக்கான தீர்வாக எச்.சி.எல் நிறுவனம் பொறியியலுக்கு பிறகு படிக்கக்கூடிய சில சிறப்பு படிப்புக்களை அறிமுகம் செய்திருக்கிறது. இன்னும் ஏனைய துறைகளிலும் ஒரேயொரு பட்டத்தோடு வேலை தேடுவது சிரமாகிக்கொண்டே இருக்கிறது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு குறைந்தபட்சம் 5 அல்லது 6 ஆண்டுகள் உயர்கல்விக்கான பெரும் செலவுகள் காத்திருக்கின்றன. இதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இல்லை என்றால் குறைவான செலவு பிடிக்கும் கல்வியைப் பயில உங்கள் குழந்தையை சம்மதிக்க வைக்க முடியும் என நம்புகிறீர்களா?

6.   குழந்தைகள் ஈடுபடும் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (50 சதவிகிதம் இந்திய குழந்தைகள் ஏதோ ஒருவகையிலான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்) ஆகியவை தொடர்ந்து கணிசமாக அதிகரிக்கின்றது, 2025 ஆம் ஆண்டில் 26 கோடி வேலைவாய்ப்புக்கள் இயந்திரமயமாக்கல் மூலம் பறிபோகவிருக்கிறது, உலகின் மிக மோசமான சூழல் சீர்கேடுகள் கொண்ட நகரங்களில் பாதிக்கும் மேலானவை இந்தியாவில் இருக்கின்றன (டெல்லியில் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அருகில் ஆஸ்த்துமாவுக்கு பயன்படுத்தும் இன்ஹேலர்கள் (பயன்படுத்தப்பட்டவை) அதிக எண்ணிக்கையில் காணக்கிடைக்கின்றன),  நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் குழந்தைகள் இந்த சவால்களை எதிர்கொண்டுதான் வளரவேண்டும். வெறும் வேலையை உத்திரவாதப்படுத்தும் கல்விக்காக மெனக்கெடும் நீங்கள் இந்த சவால்கள் குறித்து என்றைக்காவது சிந்தித்திருக்கிறீர்களா?

இந்த தகவல்களும் கேள்விகளும் யாரையும் பயமுறுத்துவதற்காக எழுப்பப்படுபவை அல்ல. ஆனால் எல்லா செலவீனங்களும் கடுமையாக உயர்ந்துவரும் வேளையில், வேலைச் சந்தை தீவிரமான போட்டியில் இருக்கையில் இத்தகைய கேள்விகளிடம் இருந்து நாம் விலகி ஓட முடியாது. வெளிப்படையாக இந்த கேள்விகள் நமக்குள் எழாமல் இருந்தாலும் நமது மூளையில் இத்த கேள்விகள் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கும். அது வேறு வகையான வழிகளில் வெளிப்படலாம். அது உங்கள் குழந்தைகள் மீதான அதீதமான எதிர்பார்ப்பாகவோ அல்லது பணிச்சூழலில் பொருந்திப்போக இயலாமையாகவோ வெளிப்படலாம். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய ஒரு வெடிகுண்டிற்கு அருகே உங்களால் அமைதியாக இருக்க முடியாதில்லையா? 

ஒரு சிக்கலை தீர்ப்பதற்கான எளிமையான வழியும் சிக்கலான வழியும் ஒன்றுதான்… அது அந்தச் சிக்கலை புரிந்துகொள்வது. அந்த அடிப்படையிலேயே இந்த கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இதனை கையாளுவதற்கான சாத்தியமுள்ள வழிகளை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment