Wednesday, August 24, 2016

பள்ளிக் கல்வி – பெற்றோர்கள் பதற்றம் கையாளக்கூடியதே.



ஓராண்டுக்கு முன்னால் நான் சந்தித்த பெண் ஒருவர் தன் மகள் குறித்து கடும் மனஉளைச்சலில் இருந்தார். 9 வயது மகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதுதான் அவரது கவலைக்கான காரணம். ஆனால் அவரது பதற்றம் அந்த கவலையை கற்பனைக்கெட்டாத எல்லைக்கு கொண்டு சென்றிருந்தது. அவள் கல்லூரி ஹாஸ்டலில் எப்படி தங்குவாள், திருமணத்தை எப்படி நடத்துவது என அடுத்த முப்பதாண்டுகளுக்கான கவலையை அவர் பட்டியலிட்டார்.

இது தொடர்பாக அவர் மருத்துவர்களை கலந்தாலோசித்திருக்கிறார். அவர் மகளுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஒரு மனநல ஆலோசகரை சந்தியுங்கள் எனவும் அவர் சந்தித்த மருத்துவர் சொல்லியிருக்கிறார். பிறகு அந்த சிறுமியிடம் பேசுகையில் இன்னொரு தீவிரமான சிக்கல் தெரியவந்தது. அவரது அப்பா தன் மனைவியை மிக மூர்க்கமாக தாக்கும் இயல்புடையவர். அடிக்கையில் மனைவி அறைக்குள் ஓடி ஒளியக்கூடாது என்பதற்காக உள்தள்பாளை கழற்றிவைக்கும் அளவுக்கு வன்முறை எண்ணம் கொண்டிருக்கிறார். மகளை அனேகமாக அவர் பொருட்படுத்துவதில்லை, மகள் படிக்கும் பள்ளி கட்டணம் அவரது தம்பி படிக்கும் பள்ளி கட்டணத்தைவிட 4 மடங்கு குறைவு. நொறுக்கு தீனிகூட அவர் மகனுக்கு மட்டுமே வாங்கித்தருகிறார். 

இவ்வளவு சிரமங்களை சந்திக்கும் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இங்கே நடந்திருப்பது இரண்டு பொருத்தமற்ற செயல்பாடுகள். ஒன்று அவர் தமது அச்சமூட்டக்கூடிய வாழ்க்கை சூழலின் பார்வையிலேயே தமது மகளின் எதிர்காலம் பற்றிய அனுமானங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார் அல்லது தமது நிகழ்கால பயத்தை மகளின் எதிர்காலம் பற்றிய கவலையின் மூலம் வெளிப்படுத்துகிறார். இன்னொன்று மகளின் பிரச்சினைக்கு காரணமானவற்றைப் பற்றி யோசிக்காமல் அதன் பின்விளைவுகளை மட்டும் மிகைப்படுத்தி கவலைப்படுவதன் மூலம் அவர் தன் மகளின் பிரச்சினையை இன்னும் தீவிரமாக்குகிறார் (சிறுமிக்கு அம்மாவை சிரமப்படுத்துகிறோம் எனும் கவலை அதிகமாக இருக்கிறது).

இது எல்லா பெற்றோருக்கும் பொருந்துகிற உதாரணம் அல்ல. ஆயினும் தங்களின் பிள்ளைகள் குறித்து மிகையான திட்டமிடல்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் பெரும்பான்மை பெற்றோருக்கு இருக்கிறது. மேலும் ஒரு பிரச்சினையை நேரடியாக எதிர்கொள்ளாமல் அதன் எதிர்வினையை இன்னொரு பிரச்சினையின் மேல் காட்டுவது என்பதையும் பல பெற்றோர்கள் செய்கிறார்கள். இவை இரண்டுமே ஒருவரது மன அழுத்தத்தை தூண்டக்கூடியவையே.

அமெரிக்கன் சைக்கலாஜிக்கல் அசோசியேஷன் நடத்திய ஆய்வொன்று பத்தில் ஒன்பது பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு தங்களுக்கு மன அழுத்தம் தரும் காரணி என தெரிவித்திருப்பதாக சொல்கிறது. பிள்ளைகளின் ரிடையர்ட்மெண்ட் காலம் வரைக்குமான கவலைகளை சுமக்கும் இந்திய பெற்றோருகளுக்கு இது இன்னும் தீவிரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை.
இது தொடர்பாக பெரிய விவாதங்களுக்கு போவதற்கு முன்னால் சில எளிய மன அழுத்த மேலாண்மை வழிகளை பார்க்கலாம்.

என் குழந்தைகளுக்காவே நான் வாழ்கிறேன் எனும் எண்ணத்தை கைவிடுங்கள்.
தமிழ்நாட்டில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வாசகம் இதுவாகவும் இருக்கலாம். சொல்பவர்களாலேயே நம்பப்படும் பொய் இது. உண்மையில் அடுத்தவர்களுக்காகவே வாழ்வதென்பது சாத்தியமில்லை (அது மகனாகவோ மகளாகவோ இருந்தாலும்). குழந்தைக்காக நீங்கள் வாழ்ந்தால் அவர்கள் அவர்கள் குழந்தைகளுக்காக வாழ்வார்கள். அப்படியானால் ஒருவரும் இங்கே அவர்களுக்காக வாழ முடியாது..
குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரி வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும். குழந்தைகள் மகிழ்ச்சியான வாழ்வை வாழ வேண்டுமென விரும்பினால் பெற்றோர்கள் தம் வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக்கொள்ளவதுதான் சுலபமான வழி. உங்கள் விருப்பங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கேயான அடையாளத்துக்கு நேரம் ஒதுக்குங்கள். அப்படி தனிப்பட்ட அடையாளம் இல்லாத காரணத்தல்தான் பல பெற்றோர்கள் பிள்ளைகளை தங்கள் அடையாளமாக கருத ஆரம்பிக்கிறார்கள். பல சிக்கல்கள் அதில் இருந்துதான் துவங்குகிறது. 

“இது என் தவறு அல்ல” என்பதை நினைவில் வையுங்கள்.
பொதுவாகவே இந்திய பெற்றோர்களுக்கு தங்களால் சரியான முறையில் குழந்தைகளை வளர்க்க முடியவில்லையோ எனும் குற்ற உணர்வு இருக்கிறது. இது மிகையான செல்லம் கொடுப்பதிலோ அல்லது அதீத கண்டிப்பிலோ சென்று முடிகிறது. சில சமயம் அதீத கண்டிப்பு பிறகு அந்த குற்ற உணர்வில் அதிகப்படியான செல்லம் கொடுப்பது என இரண்டு எல்லைகளுக்கு செல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.
குழந்தை வளர்ப்பு திறன் என்பது பிரீ லோடட் சாஃப்ட்வேர் அல்ல. குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோர்களும் வளர்கிறார்கள். இதில் தவறுகள் வர 100 சதவிகிதம் சாத்தியம் உண்டு. செயல்பாடுகளை பரிசீலியுங்கள், தவறுகள் இருப்பின் குழந்தையிடம் மன்னிப்பு கேளுங்கள். குழந்தை வளர்ப்பில் தவறுகள் நடப்பது இயல்பானது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். மாறாக 100% நேர்த்தியான பெற்றோராக இருக்க முயற்சித்தால் தோல்வியும் குற்ற உணர்வும்தான் மிஞ்சும். 

அதிக எண்ணிக்கையிலான நண்பர்களோடும் உறவினர்களோடும் தொடர்பை பராமரியுங்கள்.
ஒரு பெரிய குழுவோடு இருக்கையில் நாம் இயல்பாகவே பாதுகாப்பாய் உணர்வோம். நமக்காக செய்துகொள்ளும் செயல்களைக்காட்டிலும் அடுத்தவர்களுக்காக செய்யும் உதவிகளே அதிகம் மகிழ்ச்சியளிக்கும் என உளவியலாளர்கள் சொல்கிறார்கள். உங்கள் பிள்ளைகளை நம்பிக்கையோடு விட்டுச்செல்லும் அளவுக்கு நெருக்கமான நண்பரோ உறவினரோ அருகாமையில் இருந்தால் குழந்தைகள் பற்றிய உங்கள் பதற்றத்தில் பாதியை குறைக்கலாம். உங்கள் கவலைகளை பகிர்ந்துகொள்ள போதுமான எண்ணிக்கையில் ஆட்கள் இருந்தால் அதனை நாம் தேவையற்ற இடங்களிலும் தேவையற்ற வழிகளிலும் வெளிப்படுத்துவதை தவிர்க்கலாம்.
இதன் மூலம் பல்வேறு இயல்பு கொண்ட மனிதர்களோடு உரையாடவும் பழகவும் உங்கள் குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். உண்மையில் இந்த அனுபவம்தான் கல்வியைவிட அவர்கள் எதிர்காலத்துக்கு அதிகம் பயன்படும்.
மேலும் உங்கள் குழந்தைகளின் சக மாணவர்களின் பெற்றோரோடு ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

உடற்பயிற்சி உடல்நலத்துக்கு மட்டுமானதல்ல..
தினமும் உடற்பயிற்சி செய்வது உங்கள் மனநலத்தை மேம்பட்டுத்தும். மனிதர்களை மகிழ்ச்சியாக உணர வைக்கும் உயிர் வேதியல் மாற்றங்கள் உடற்பயிற்சி செய்வதால் நிகழ்கின்றன. மேலும் உடல் வலுவாக இருப்பவர்கள் பலவீனமானவர்களைவிட அதிகம் நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ள முடியும். 

மற்ற பெற்றோரோடு உங்களை ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.
இங்கே குழந்தைகள் தொடர்பான முடிவுகள் பலவும் பிறரோடு ஒப்பிடுவதன் மூலம் எடுக்கப்படுகின்றன. பொம்மைகள் தொடங்கி கல்லூரி தெரிவுவரை இந்த ஒப்பீடு நீள்கிறது. இது தேவையற்றது.
பிறரது முடிவுகள் அவரது சூழல் மற்றும் அறிவு ஆகியவ்ற்றைக் கொண்டு எடுப்பப்படுபவை, அவை நமக்கும் பொருந்த வேண்டும் என அவசியமில்லை. இன்னொன்று அவர் ஏதோ ஒரு அம்சத்தில் சிறந்த தகப்பனாகவோ தாயாகவோ இருந்தால் நீங்கள் வேறொரு அம்சத்தில் சிறந்தவராக இருப்பீர்கள். ஆகவே பிறரோடு ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை கொள்ளவோ அல்லது முடிவுகள் எடுக்கவோ அவசியமில்லை.

தீர்மானமான நீண்டகால இலக்குகளை மறுபரிசீலனை செய்யுங்கள்.  அதாவது மகனை அல்லது மகளை மருத்துவர் ஆக்குவது அல்லது I.A.S ஆக்குவது போன்ற தீர்மானங்களை திட்டங்களை வைத்திருப்பது. எதிர்கால மகிழ்ச்சிக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது இன்றைய மகிழ்ச்சி. இத்தகைய மிகத் தீர்மானமான இலக்குகள் உங்கள் இன்றைய மகிழ்ச்சியை சிதைக்கும் வாய்ப்புக்கள் அதிகம். 20 ஆண்டுகளுக்கு முன்னால் உங்களுக்கு சிறப்பான முடிவாக தோன்றியது இன்று சாதாரணமாகவோ அல்லது தவறாகவோ தோன்றலாம். காலமும் அனுபவமும் நமது விருப்பங்களிலும் லட்சியங்களிலும் மாற்றங்களை செய்துகொண்டே இருக்கும். அதனால் நீண்டகால இலக்குகளை மீளாய்வு செய்யுங்கள், கூடுமானவரை அவற்றை கைவிடுங்கள்.

சரியான உணவுப்பழக்கத்தை கடைபிடியுங்கள்.
எல்லோருக்கும் பொருந்தக்கூடிய டயட் என்று ஒன்று இல்லை. ஆனால் பொதுவாக சொல்லப்படும் உணவுப்பழக்க ஆலோசனைகளை உங்களுக்கு உகந்த வழிகளில் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். சைவ உணவு  மன அமைதியை உருவாக்கும் என சொல்லப்படுவதெல்லாம் பொய். உண்மையில் சைவ உணவுக்காரர்களுக்குத்தான் மன அழுத்தம் வர சாத்தியம் அதிகம். மன அழுத்தத்தை குறைக்க பரிந்துரைக்கப்படும் உணவுகளில் மாட்டு ஈரலும் ஒன்று. வாழைப்பழம் மற்றும் பச்சைத் தேநீர் ஆகியவை சிறந்த பதட்ட குறைப்பு உணவுப் பொருட்கள். அவற்றையும் வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இவையெல்லாம் பெரும்பான்மை தமிழக(இந்திய) பெற்றோர்களுக்கு ஓரளவுக்கு பொருந்திப்போகும் ஆலோசனைகள். இவை அனைத்தும் அனைவருக்கும் பயன்படும் என கருத இயலாது. இவற்றை தாண்டி எழும் சிக்கல்களை ஒரு சரியான வல்லுனரை கலந்தாலோசிப்பதன் வாயிலாக நிர்வகிக்க முடியும். பெற்றோராக இருப்பது ஒரு 24 மணிநேர வேலை. இதில் மன அழுத்தமே இல்லாமல் வாழ்வது சாத்தியம் இல்லை. பதட்டம் என்பது ஓரெல்லைவரை நன்மை பயக்கக்கூடியதே. ஆகவே மன அழுத்தம் இல்லாத வாழ்வை விரும்புவதைக்காட்டிலும் அதனை சரியாக நிர்வகிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதுதான் நேர்மறையான பெற்றோருக்கு தேவை.

Sunday, July 17, 2016

பள்ளிக்கல்வி – தமிழகம் சிக்கிக்கொண்டிருக்கும் அபாயப்பொறி.



தஞ்சை பெஸ்ட் பள்ளியில் +2 படிக்க ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கட்டணம் வாங்குவதாகவும் ஆனால் 25 ஆயிரத்துக்கு மட்டுமே ரசீது  தரப்படுவதாகவும், மேலும் நாமக்கல் கோச்சிங் என்று சொல்லிவிட்டு சாதாரண கோச்சிங் தரப்படுவதாகவும் கூறி பெற்றோர்கள் சில நாட்களுக்கு முன்னால் போராடினார்கள். அதே காலகட்டத்தில் தஞ்சையை சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் மகளை ஒரு பிரபலமான பள்ளியில் இருந்து பெஸ்ட் பள்ளிக்கு மாற்றலாமா என தீவிரமான பரிசீலித்துக்கொண்டிருந்தார்கள். காரணம் இந்த ஆண்டு பெஸ்ட் பள்ளியின் முதல் மாணவர் இவர்களது மகள் படிக்கும் பள்ளி முதல் மாணவரைவிட 2 மதிப்பெண் கூடுதலாக பெற்றிருக்கிறார். 

இன்னொரு நிகழ்வு, எனது நெருங்கிய உறவினர் தமது மகனை ஆண்டுக்கு ஒரு லட்சம் செலவாகும் பள்ளியில் எல்.கே.ஜி சேர்த்திருக்கிறார். அவரது இன்னொரு மகனையும் அங்கேயே சேர்க்க உத்தேசித்திருக்கிறார். அவர்கள் +2 படிக்கும் வரை ஆகப்போகும் தோராயமான செலவு எவ்வளவு குறைவாக கணக்கிட்டாலும் 30 லட்சம் ஆகும். 2 லட்சம் என்பது அவரது ஆண்டு வருவாயில் பாதிக்கும் அதிகம். ஆனாலும் அவர் துணிந்து இந்த பள்ளியை தெரிவு செய்திருக்கிறார்.

சக்திக்கு மீறி செலவிட்டு படிக்க வைப்போரது சிக்கல் கல்விச்செலவோடு நிற்பதில்லை. சென்னையின் உயர்குடி மக்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் மிகச்சிரமப்பட்டு இடம் வாங்கிய நண்பர் ஒருவர் பிரச்சினை வேறொன்றாக இருக்கிறது. அவரது மகள் பள்ளி சுற்றுலாவுக்காக வாங்கிய ஆடை அணிகலன்களின் விலை மட்டும் பதினைந்தாயிரம் ரூபாய் (சுற்றுலா செலவு ஏழாயிரம்தான்). மகளது மாலை சிற்றுண்டி செலவே மலைக்க வைப்பதாக இருப்பதாக சொல்லி புலம்புகிறார் அவர் (தெரிவு செய்யும் கடைகள் அப்படி). அவர் வசம் இப்போது சேமிப்பு என்று ஏதுமில்லை, கல்லூரி செலவுகள் பற்றிய யோசனையே அவரை அச்சமூட்டுகிறது.

இந்த கட்டுரைக்காக தெரிந்தவர்கள் வட்டாரத்தில் இருக்கும் 21 பெற்றோரிடம் சில கேள்விகளை கேட்டேன். (எல்லோரும் 2 – 3 வயதுடைய குழந்தைகளின் பெற்றோர்கள், எல்லோரும் நடுத்தர வர்கத்தவர்கள் சிலருக்கு சொந்த வீடுகூட இல்லை)

உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க எவ்வளவு செலவளிப்பீர்கள்?
அனேகம் பேர் எழுபதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை என்றார்கள். சிலருக்கு அது குறித்த எந்த யோசனையும் இல்லை. ஆனால் அவர்களது தெரிவு ஆண்டுக்கு எழுபத்தைந்தாயிரம் வாங்கும் பள்ளியாக இருக்கிறது.
இவ்வளவு செலவு பிடிக்கும் பள்ளியின் மூலம் உங்கள் குழந்தையிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? 

எல்லோரிடமும் இருந்த ஒரே பதில் அவன(ள)து சிறப்பான எதிர்காலம் என்பதாக இருந்தது. ஒரே ஒரு தாய் மட்டும் ஒழுக்கம்(டிசிப்ளின்) என்றார். நீங்கள் தெரிவு செய்த பள்ளி ஒழுக்கத்தை கற்றுத்தரும் என எதைவைத்து நம்புகிறீர்கள் என கேட்டேன்.. அப்பள்ளியில் படிக்கும் - அவரது தெரு குழந்தைகள் மடியில் துண்டு போர்த்திக்கொண்டு ஸ்பூனில் சாப்பிடும் அளவுக்கு பயிற்சி பெற்றிருப்பதாக சொன்னார்.

ஒருவேளை இந்த கல்விச் செலவுகளை உங்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?
ஒருவரைத் தவிர எல்லோரும் ஏதாச்சும் ஒன்னு பண்ணி சமாளிக்க வேண்டியதுதான் என்றார்கள். ஒரே ஒரு தந்தை மட்டுமே அன்றைய சூழலுக்கு தகுந்த பள்ளியில் சேர்ப்பேன் என்றார். மற்றவர்கள் அந்த சிந்தனைக்கே தயாராக இல்லை. 

நீங்கள் சேர்க்க விரும்பும் பள்ளியை எப்படி தெரிவு செய்தீர்கள்?
எல்லோரும் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமே பள்ளியை தெரிவு செய்திருக்கிறார்கள். எந்த பள்ளிக்கு டிமாண்ட் அதிகம் இருக்கிறதோ அதுவே விருப்பத் தெரிவில் முதலில் இருக்கிறது. பலரும் அவர்கள் விரும்பும் பள்ளியில் படிக்கும்/ படித்த குழந்தைகளையோ அல்லது அவர்களது பெற்றோரையோ சந்தித்து பேசியதில்லை. சுருங்கச்சொன்னால் எல்லோரும் ஓடும் திசையில் ஓட முனைகிறார்கள்.

(3வயது குழந்தைகளின் பெற்றோருக்கான கேள்வி) உங்கள் குழந்தை தன் உணவை தானே சாப்பிடுமா?
அனேகமாக எல்லோரது பதிலும் இல்லை என்பதே.

(3வயது குழந்தைகளின் பெற்றோருக்கான கேள்வி) உங்கள் குழந்தைக்கு A,B,C,D தெரியுமா?
எல்லோரது குழந்தைகளுக்கும் தெரிந்திருக்கிறது. எல்லோரும் தங்கள் குழந்தைகளை ப்ரீ கேஜியில் சேர்த்திருகிறார்கள். ஒருவர் பிரீ கேஜிக்கு ஒரு லட்சம் நன்கொடை கொடுத்திருக்கிறார் (அந்தப்பள்ளியில் எல்.கே.ஜி அட்மிஷன் கஷ்டமாம்).

இந்த பெற்றோருக்கு சில தகவல்களை கொடுக்கவும் கேட்கவும் வேண்டியிருக்கிறது,

1.   குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்துக்கு பள்ளியைவிட பெரிதும் அவசியமானது சரியான வீட்டுச்சூழல் (பெற்றோர்களுக்கிடையேயான இணக்கமான வாழ்க்கை) . கல்விக்கட்டணம் பெரும் நெருக்கடியை கொடுக்கும் நிலையில் ஒரு அமைதியான வீட்டுச்சூழல் சாத்தியமாகுமா?

2.      “  X ” எனும் எழுத்தை எழுதுவதற்கான மூளைத்திறனைப் பெற குழந்தைகளுக்கு 5 வயதாவது ஆகியிருக்க வேண்டும். பல வளர்ந்த நாடுகளில் எழுத்துப்பயிற்சி அதற்குப் பிறகுதான் ஆரம்பிக்கும். உங்கள் குழந்தைகளுக்கான எழுத்துப்பயிற்சியை எப்போது உங்கள் பள்ளி ஆரம்பித்தது?


3.   இன்றைய கல்வி முறையானது 60 விழுக்காடு குழந்தைகளுக்குத்தான் பொருத்தமானது, ஏனையவர்களுக்கு அது அத்தனை இலகுவானதல்ல. ஒருவேளை அந்த 40 விழுக்காடு மாணவர்களில் உங்கள் மகனோ மகளோ ஒருவராக இருந்தால் உங்கள் எதிர்வினை எப்படியிருக்கும்?

4.    சமீப காலங்களில் படித்துவிட்டு வெளியேறும் மாணவர்களில் 80 சதவிகிதமானவர்கள் பணியாற்ற தகுதியற்றவர்கள் என என தரவுகள் சொல்கின்றன. இவர்களில் பெரும்பான்மையோர் தனியார் பள்ளிகளில் பயின்றவர்கள். இந்த சிக்கலில் இருந்து உங்கள் குழந்தையை அவரது பள்ளி காப்பாற்றும் என நம்புகிறீர்களா… அல்லது இதனை சமாளிக்கும் வழி குறித்து ஏதேனும் யோசனை இருக்கிறதா?


5.   மேலே சொன்ன சிக்கலுக்கான தீர்வாக எச்.சி.எல் நிறுவனம் பொறியியலுக்கு பிறகு படிக்கக்கூடிய சில சிறப்பு படிப்புக்களை அறிமுகம் செய்திருக்கிறது. இன்னும் ஏனைய துறைகளிலும் ஒரேயொரு பட்டத்தோடு வேலை தேடுவது சிரமாகிக்கொண்டே இருக்கிறது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு குறைந்தபட்சம் 5 அல்லது 6 ஆண்டுகள் உயர்கல்விக்கான பெரும் செலவுகள் காத்திருக்கின்றன. இதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இல்லை என்றால் குறைவான செலவு பிடிக்கும் கல்வியைப் பயில உங்கள் குழந்தையை சம்மதிக்க வைக்க முடியும் என நம்புகிறீர்களா?

6.   குழந்தைகள் ஈடுபடும் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (50 சதவிகிதம் இந்திய குழந்தைகள் ஏதோ ஒருவகையிலான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்) ஆகியவை தொடர்ந்து கணிசமாக அதிகரிக்கின்றது, 2025 ஆம் ஆண்டில் 26 கோடி வேலைவாய்ப்புக்கள் இயந்திரமயமாக்கல் மூலம் பறிபோகவிருக்கிறது, உலகின் மிக மோசமான சூழல் சீர்கேடுகள் கொண்ட நகரங்களில் பாதிக்கும் மேலானவை இந்தியாவில் இருக்கின்றன (டெல்லியில் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அருகில் ஆஸ்த்துமாவுக்கு பயன்படுத்தும் இன்ஹேலர்கள் (பயன்படுத்தப்பட்டவை) அதிக எண்ணிக்கையில் காணக்கிடைக்கின்றன),  நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் குழந்தைகள் இந்த சவால்களை எதிர்கொண்டுதான் வளரவேண்டும். வெறும் வேலையை உத்திரவாதப்படுத்தும் கல்விக்காக மெனக்கெடும் நீங்கள் இந்த சவால்கள் குறித்து என்றைக்காவது சிந்தித்திருக்கிறீர்களா?

இந்த தகவல்களும் கேள்விகளும் யாரையும் பயமுறுத்துவதற்காக எழுப்பப்படுபவை அல்ல. ஆனால் எல்லா செலவீனங்களும் கடுமையாக உயர்ந்துவரும் வேளையில், வேலைச் சந்தை தீவிரமான போட்டியில் இருக்கையில் இத்தகைய கேள்விகளிடம் இருந்து நாம் விலகி ஓட முடியாது. வெளிப்படையாக இந்த கேள்விகள் நமக்குள் எழாமல் இருந்தாலும் நமது மூளையில் இத்த கேள்விகள் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கும். அது வேறு வகையான வழிகளில் வெளிப்படலாம். அது உங்கள் குழந்தைகள் மீதான அதீதமான எதிர்பார்ப்பாகவோ அல்லது பணிச்சூழலில் பொருந்திப்போக இயலாமையாகவோ வெளிப்படலாம். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய ஒரு வெடிகுண்டிற்கு அருகே உங்களால் அமைதியாக இருக்க முடியாதில்லையா? 

ஒரு சிக்கலை தீர்ப்பதற்கான எளிமையான வழியும் சிக்கலான வழியும் ஒன்றுதான்… அது அந்தச் சிக்கலை புரிந்துகொள்வது. அந்த அடிப்படையிலேயே இந்த கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இதனை கையாளுவதற்கான சாத்தியமுள்ள வழிகளை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.